சிங்காரச் சென்னைக்குப் போகப் போறேன்-அங்கே
சீர்மிகுந்த இடங்களையேப் பார்க்கப் போறேன்! மங்காத மெரினாபீச் போகப் போறேன்-அங்கே
மனங்குளிர அலைநனைந்து நிற்கப் போறேன்! தலைவர்களின் நினைவிடங்கள் பார்க்கப் போறேன்-அந்த
தலைவர்களின் புகழ்களையும் அறியப் போறேன்! நிலைத்தபுகழ் பெரியோர்சிலை பார்க்கப் போறேன்-அவர்
நினைவுகளை நெஞ்சினிலே போற்றப் போறேன்! பல்கலைக் கழகத்தைப் பார்க்கப் போறேன்-அங்கே
படித்துபுகழ் பெற்றிடவே நினைக்கப் போறேன்! வள்ளுவரின் கோட்டமங்கேப் போகப் போறேன்-புகழ்
வள்ளுவரின் தேரழகைப் பார்க்கப் போறேன்! அருங்காட்சி யகத்திற்குப் போகப் போறேன்-அங்கே அரியபொருள் அத்தனையும் பார்க்கப் போறேன்! சிறுவர்களின் பூங்காவிற்குச் செல்லப் போறேன்-அங்கே
சிரித்துமனம் களித்திடவே ஆடப் போறேன்! உயிரியல் பூங்காவிற்குச் செல்லப் போறேன்-அங்கே
உலவுகின்ற விலங்குகளைக் காணப் போறேன்! பயிற்றுகின்ற நூலகங்கள் செல்லப் போறேன்-அங்கே
பல்வகையாம் நூல்களையும் படிக்கப் போறேன்! சுற்றிவந்து பார்ப்பதற்கு பலநாள் வேண்டும்-அதைச்
சுற்றிப்பார்த்து களிப்பதற்கு எண்ணம் தூண்டும்! சுற்றிநிற்கும் தடைகளையே உடைக்கப் போறேன் -ஊர்
சுற்றிவந்து அனைத்துயுமே பார்க்கப் போறேன்!